Tuesday, August 26, 2008

சுட்டெரிக்கும் தனிமை...


தோட்டத்து செடிகளில் கூட...
முட்கள் மட்டுமே பூக்கிறது...

சிரித்த தருணங்களும் கூட...
இந்த கணம் நினைக்கையில்...
கண்ணீரின் பின்னணியில் தெரிகிறது..
மங்கலாக....

தனிமையின் வெறுமை...
சிறு நிழலென தொடங்கி...
பின்னிரவின் இருளென பரவுகிறது..

மின்விசிறியின் சத்தம் மட்டும் துணையாய் கொண்டு...
விழித்தபடியே கழிக்கும் இரவுகள்...
ஓங்கி ஒலிக்கும் நிசப்தத்தின் அதிர்வினில்...
அரண்டு போகிறது மனம்....

சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...
எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...
எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...

காற்றில் கரைந்த வார்த்தைகள் எல்லாம்...
என்றேனும் ஒரு நாள்...
உங்களில் யாருக்கேனும் கிடைக்க கூடும்...
வானவில் மூலமோ.... வான்மழை மூலமோ...

இன்னும் ஓர் இரவு...


சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...

Wednesday, August 13, 2008

எனக்கான நீ.....

வண்ணங்களற்றிருந்த என் வாழ்வின் முதல் வானவில் நீ..
உறக்கமற்ற இரவுகளில் என் விழிகளை வருடிய தென்றல் நீ..
யாருமற்ற தனிமையில் நான் ரசித்த பாடல் நீ...
எதிர்பாராத தருணத்தில் என் தேகம் நனைத்த சாரல் நீ...

நீ எனக்கு தந்ததெல்லாம்...
உன்னில் தொடங்கி....
உன்னோடே முடிகிற நினைவுகள்தான்...

இன்றும் கூட நினைவுகளாய்...
என் கண்ணோரம் துளிர்க்கும் கண்ணீர் நீ..

நீ....நான்....காதல்..




உன்னை பற்றிய நினைவுகளை
சுமந்து சுமந்து நான் பெற்ற குழந்தை
காதல்...
-----------------------------------------------------
கவிதையாய் காதலிக்க
ஆசைப்பட்டவன் நான்...
ஒரு கவிதையை
காதலிக்கும்படி ஆகிவிட்டது...
-----------------------------------------------------
உன் கண்களை
ஒரு முறை பார்த்துவிட்ட பின்...
வானவில் கூட
கருப்பு வெள்ளையாய் தான் தெரிகிறது...
-----------------------------------------------------
நீ எனக்காக பிறந்திருக்கிறாய்..
நான் உனக்காக பிறந்திருக்கிறேன்..
நாம் காதலுக்காக பிறந்திருக்கிறோம்.
-----------------------------------------------------
என் கவிதைகளை படித்தபின்
மௌனமாய் நீ உதிர்க்கும் சிறு புன்னகையில்...
பிழைத்து நிற்கிறது என் காதல்..

Tuesday, August 5, 2008

கா....த....ல்..


இரவும் கூட பகலாகும்..
பகல் முழுதும் கனவாகும்...
அவள் நினைவுகளே உணவாகும்..

பூக்கள் பறித்த காலம் போய்..
சருகுகள் மிதிக்க கூட கால்கள் தயங்கும்

மொழிகள் யாவும் மௌனமாக
மௌனம் ஒன்றே மொழியாகும்...

இதயம் அருகில் அலைபேசி இருக்கும்..
இடக்கை அதனை அடிக்கடி தேடும்..

சுற்றமும் நட்பும் பாரமாய் தோன்ற..
தனிமை ஒன்றே சுகமாய் தோன்றும்..

பூக்கும் பூ...
சிரிக்கும் குழந்தை...
மாலை மழை..
இரவு நிலா..
காலம் காலமாய் இருப்பதுதான்..
உனக்கு மட்டும் புதிதாய் தெரியும்..

இரவு விழித்தல்..
உணவு மறுத்தல்..
உலகம் மறத்தல்..


கா....த....ல்..

ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு ஞாபகம்....

உன் நினைவுகள் பெரும்பாலும் மழையோடு இணைந்தவை தான்...

நீ குடை மறந்த ஒரு மழை நாளில்தான்
முதல் முதலாய் மழை எனை நனைத்தது...

உனக்கும் எனக்குமான உரையாடல்களில்
பெரும்பகுதியை மழை நனைத்து செல்லும்...

நீ எனக்கானவள், நான் உனக்கானவன் என நாம் உணர்ந்ததும்
ஒரு மழை இரவின் பகிர்தலில் தான்...

முதல் முதலாய் உன் முத்தத்தின் வெப்பம் உணர்ந்ததும் கூட...
ஒரு டிசம்பர் மாத மாலை மழையில்தான்...

கனவு தகர்த்து காதல் தந்தவள்,
உன் காதல் பறித்து நினைவு தந்த நாளில்...
மௌன சாட்சியாய் பூமி நனைத்தது மழையும்தானே..

ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு ஞாபகம்...
இனி வரும் எல்லா மழையும்... உன் ஞாபகம்...

இப்பொழுதெல்லாம் கண்கள் மூடி உறங்கும் போதும்
கனவெல்லாம் மழை பெய்து விழி நிறைகிறது...
கன்னம் வழி கீழிறங்கி நிலம் நனைக்கிறது...

மழை பெய்த ஈர சாலையில் அமைந்ததென் பயணம்.

மழையிடம் கடன் வாங்கிய துளிகளை
மழை விட்ட பின்பும் தூறிக் கொண்டிருந்தன
சாலையோர மரங்கள்...

பிள்ளையின் கிறுக்கல் போல்
புரியாத ஓவியமாய்
வானமெங்கும் பரவி கிடந்தன மேகங்கள்...

இன்னதென்று சொல்ல முடியாத
வண்ணம் கொண்ட பூக்கள் மீது மயக்கம் கொண்டு
வனமெங்கும் சுற்றி திரிந்தன பட்டாம்பூச்சிகள்...

வண்ணங்கள் வழியே வானளக்க
முற்பட்ட ஓவியன் யாரென்று தெரியவில்லை
அழகாய் பூத்திருந்தது வானவில்...

கடந்து சென்ற வாகனத்தின் சன்னல் வழி
கையசைத்த குழந்தையின் சிரிப்பில் தெறித்து விழுந்தது எங்களுக்கிடையேயான அந்நியம்...

வாகனத்தின் வேகத்தில் என் நெற்றிப் பட்டு
தெறித்த மழைத்துளியின் ஈரத்தில் உணர்ந்தேன்
எனக்கான இயற்கையின் முத்தத்தை...