Monday, December 14, 2009

தொலைந்த வனம்...


அந்த கனவு
எப்பொழுதும் வரும்.
உறக்கம் கலைந்தும்..
நினைவில் நிற்கும்.

அடர்ந்த வனத்தின்
ஒற்றை மனிதனாய்
நீண்ட நேரம்
அலைந்திருப்பேன்..

பசி தொலைத்து..
நினைவு தொலைத்து..
உலகத்தையே தொலைத்து..
தனியே நான் மட்டும்.

வனம் அதிர..
பெருங்குரலெடுத்து
எவனோ பாடும் பாடல்...
உயிரின் நரம்புகளை
மீட்டி செல்லும்.

அவன் பாடலில்..
செழித்து வளரும்
வனம் மெல்ல..
என் மீது படர துவங்கும்.

அடர்ந்த வனத்தின்..
இருள் கிழித்தபடி பாயும்..
ஒளியை சுவாசிக்கும் முன்னே..
உறக்கம் தொலைத்திருப்பேன்.

பின் வந்த நாட்களில்
மெல்ல மெல்ல
பாடல் தொலைய தொடங்கியது.

பாடலை தொலைத்த வனம்
கருக தொடங்கியது...
பின்னொரு நாளில்
வனமும் மொத்தமாய் தொலைந்தது.

இப்பொழுதெல்லாம்
கனவுகள் வருவதில்லை.
கனவுகளில் தொலைத்தவன்...
கனவையே தொலைத்து விட்டேன்.

(இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

Saturday, October 17, 2009

சந்திப்போம்... பிரிவோம்...


நீண்ட நாட்களுக்கு பின் வந்தாய்...
அறிவிப்பில்லாத மழையை போல சிலசமயம்..
நிகழ்ந்து விடுகிறது இது போன்ற சந்திப்புகள்..
உன் கண்களின் பரிச்சயம்..
ஏனோ அந்நியமாய் தோன்ற...
என் நலம் வினவினாய்....

எதனை சொல்ல...
வாழ்க்கையென நினைத்த காதல்
வெறும் வார்த்தையென ஆன பின்னும்...
தொடர்ந்து செல்லும் வாழ்க்கை...

எதிர்ப்புகளை சமாளிக்கும் காதல் கூட...
எதிர்பார்ப்புகளின் முன் தோற்கும் என்பதற்கு..
நாமே சாட்சிகளாகி போனோம்...

கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள் தொலைத்து...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...

தினம் கண்கள் விழித்ததும் அவசரமாய்...
உன் குறுஞ்செய்தி எதிர்பார்த்து ஏமாறுவதும்...
அடுத்தவருக்கான அழைப்புகளுக்கும்...
என் அலைப்பேசி தொட்டு பின் சுதாரிப்பதும்...

இத்தனை இருந்தும்...
சொல்வதில் அர்த்தமில்லை...
வரவழைத்த புன்னகையுடன்...
நலமென பொய்யுரைத்து...
உன் நலம் வினவினேன்.
சிறிது மௌனத்திற்கு பின்
புன்னகைத்து நலமென்றாய்.

ஒன்றாய் தேநீர்...
கட்டாய புன்னகைகள்...
கொஞ்சம் வார்த்தைகள்...
நிறைய மௌனம்...

பின் ஒரு புன்னகையில்
விடைப்பெற்றாய்...
ஏனோ இம்முறையும்...
காரணம் கேட்க தோன்றவில்லை.

நீ... சில குறிப்புகள்...


இது...
உன்னை பற்றிய சில குறிப்புகள்...
உன்னால் எனக்குள் பற்றிய சில குறிப்புகள்...

இரு துளை மட்டுமே கொண்ட
மிக அழகிய புல்லாங்குழல்...
உன் நாசி...

எல்லோரையும் போல...
வெறும் காற்றை தான் உள்ளிழுக்கிறாய்.
ஆனால் நீ வெளிவிடும் காற்று மட்டும்..
எனக்கான ராகமாகிறது.

சூரியனை சுற்றி வரும் பூமி தெரியும்.
கண்களில் சூரியனை வைத்துக் கொண்டு...
பூமிக்குள் சுற்றி வருபவள் நீ.

எல்லோரையும் போல்தான்...
இமை மூடி திறக்கிறாய்.
எனக்குதான் ஒவ்வொரு முறையும்...
உலகம் இருண்டு போகிறது.

இத்தனை அழகாக உறங்க...
எங்கேதான் கற்றுக் கொண்டாயோ...

நீ உறங்கும் அழகை ரசிப்பதற்க்காய்...
தாமதமாய் வர சொல்லி...
சூரியனிடம் கெஞ்சுகிறது நிலவு.

எல்லோரையும் போல்தான்...
மழையில் நனைகிறாய்.
எவருக்கும் தெரியாமல்
உன்னில் நனைகிறது மழை.

மழையில் நனைந்தபடி...
குழந்தைகளோடு ஆடுகிறாய்.
தானும் குழந்தையாகி...
ஆட துவங்குகிறது மழை.

எதை பற்றியும் கவலை கொள்ளாத
ஒரு குழந்தையை போலதான்
நீ வாழ்கிறாய் ...

அதன் ஒவ்வொரு அசைவையும்
உற்று கவனிக்கும் ஒரு தாயை போலதான்
நான் வாழ்கிறேன்...

உன்னை பற்றி...
உனக்கு தெரியுமென்றாலும்...
எனக்கு தெரிந்த நீ...
ரகசியமானவள்... மழை போலவே...

உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை...

நம் அறிமுக நாட்களில்....
மௌனங்களை பரிமாறிக் கொண்டோம்...
பின் கொஞ்சமாய் பார்வைகளும் புன்னகைகளும்...
பேச தொடங்கி... பின் நிறையப் பேசினோம்...
இதயம் வரை நீண்டது பரிமாற்றம்.

இந்நாட்களில் மீண்டும் துவங்கியிருக்கிறது...
மௌனங்களின் பரிமாற்றம்....
இம்முறை ஒவ்வொரு மௌனத்திற்கும்...
அர்த்தங்கள் கற்பிக்கிறது மனது...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வைகள் தவிர்க்கப்படுகிறது...
பார்க்கும் பார்வைகளிலும் விடை தெரியா கேள்விகள்...
எந்த நிமிடமும் உதிர்ந்து விடும்...
ஒற்றை ரோஜாவின் கடைசி இதழாக...
நம்மிடையே மீதமிருக்கிறோம் நாம்...

நம்மை இணைத்திருந்த சிறகுகள்...
கனமாகிப் போனதாய் ஓர் எண்ணம்.
நேற்று வரை சுமந்த சிறகுகள்....
இன்று ஏனோ பூட்டப்பட்ட சங்கிலியாய்.

நம் சுயங்களின் சுமை தாங்காமல்...
நழுவி செல்கிறது முகமூடிகள்..
நம் உண்மை முகங்கள் பார்க்க பிடிக்காமல்..
பிரிவொன்றை எதிர்பார்த்து நாட்கள் கடத்துகிறோம்...

உனக்கும் இருக்ககூடும்...
சில காரணங்கள்..
உன்னிடமும் இருக்ககூடும்....
வலிகளை பட்டியலிடும் ஒரு கவிதை...
எனினும் அறிய விருப்பமின்றி விலகுகிறேன்...

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உண்டு...
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.

Wednesday, June 17, 2009

பொய் சொல்லப் போறேன்...


உள்ளங்கை காயத்தோடுதான்
வீடு நுழைந்தேன்...
பார்த்ததும் பதறிப் போனாய்...
வேக வேகமாய் திட்டி தீர்த்தாய்...
அதனினும் வேகமாய்
காயத்திற்கு மருந்திட்டாய்.
"ரொம்ப வலிக்குதா.."
என்று மட்டும்
பலநூறு தடவை கேட்டிருப்பாய்...

வலிப்பதாய் ஒருமுறை சொன்னாலும்
நீ எத்தனை துடித்து போவாயென
எனக்கு தெரியுமென்பதால்
வலியில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

என் காயம் எனக்கு வலித்ததை விட...
உன் கண்களில் அதிக வலி இருந்தது.
அழுதுவிடுவது போலிருந்த உன் முகத்தில்...
அத்தனை காதல் இருந்தது.

என் தலை கோதியபடியே...
என்னை உறங்க வைத்தாய்.

உறங்கும் என் விழியின் அசைவில்...
துளி வலி தெரிந்தாலும்
பதறி துடித்தாய்.

காயம்பட்ட உள்ளங்கையில் மிக இதமாய்...
என் உறக்கம் கலைக்காமல் முத்தமிட்டாய்.
இப்பொழுது...
என் காயம்பட்ட கையில்...
உன் கன்னம் பதித்தபடியே...
மிக அழகாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.
காதல் இவ்வளவு அழகா என்று....
உறங்கும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
காலை கண்விழித்ததும் முதலாய் கேட்பாய்..
காயத்தின் வலி பற்றி...

உன் அத்தனை காதல் முன்...
கொஞ்சமும் வலியிருக்காது என்றாலும்...
உன் காதல் வேண்டியே...
பொய் சொல்ல போகிறேன்...
"ரொம்ப வலிக்குதுடி..."

உன்னிடம் பிடிக்காதது...


உன்னிடம் எது பிடிக்காதென்று
கேட்டுக் கொண்டேயிருக்கிறாய்.
உன் தொல்லை தாங்காமல்தான்
இதனை எழுதுகிறேன்....

ஆவலாய் வரும் மழைக்கு
முகம் காட்டாமல்
குடை கொண்டு முகம் மறைப்பாயே..
அது பிடிக்காது.

கூந்தல் கலைக்கும் தென்றலை
நீ செல்லமாய் திட்ட..
அது உலகில் எங்கோ புயலாய் வீசும்..
அது பிடிக்காது.

தோட்டம் முழுக்க பூக்கள் இருந்தும்...
ஒற்றை ரோஜா மட்டுமே சூடிக் கொள்வாய்.
பூந்தோட்டமே மறுத்துவிட்டதால்...
மற்ற பூக்கள் மனம் கலங்குமே...
அது பிடிக்காது.

என் உறக்கம் ரசிப்பதற்க்காய்..
உன் உறக்கம் தொலைத்து..
விழித்திருப்பாயே...
அது பிடிக்காது.

நான் வாய் திறந்து கேட்கும் முன்பே
அத்தனையும் அள்ளி தந்து..
அடுத்து என்ன...
என்பது போல் பார்ப்பாயே...
அது பிடிக்காது.

சின்ன சின்னதாய் வம்பிழுத்து...
பொய்யாய் நான் கோபம் கொண்டாலும்...
பட்டென்று முகம் வாடி...
என் கோபம் கொன்று விடுவாயே...
அது பிடிக்காது.

இப்போதும் கூட இதை படித்ததும்...
"சீய்.. போடா" வை எனக்கு தந்துவிட்டு..
முத்தத்தை காகிதத்திற்கு கொடுப்பாயே...
அது சுத்தமாய் பிடிக்காது.

Sunday, June 14, 2009

வரப் போகும் தேவதைக்கு....

இன்னும் எத்தனை நாட்கள்தான் தவிக்க விடுவாய்...
ஒவ்வொரு நாளும் எத்தனை காதலை....
நீ இழக்கிறாய் தெரியுமா...
என்னை சந்திக்கும் நாளில்...
நிச்சயம் வருந்த போகிறாய்...

உன்னை எப்பொழுது
பார்ப்பேனோ தெரியாது...
ஆனால் பார்த்தபின்...
அந்த நொடியிலேயே...துவங்கிவிடும்
உன்னுடன் என் வாழ்வு...
இத்தனை காதலை நீ
நிச்சயம் மறுக்க மாட்டாய்...
சந்திக்கும் நொடிக்காய் காத்திருக்கிறேன்...
என் தோட்டம் முழுக்க
ரோஜா செடிகள்தான்...
முதல் முதலாய்
பூத்த பூக்களிடம் சொன்னேன்...
உங்களை தொட்டுப் பறிக்க...
தேவதை ஒருத்தி
விரைவில் வருவாள் என...
அத்தனை பூக்களும்
வாடாமல் காத்திருக்கிறது...
உன் பெயர் என்னவென்று தெரியாது.
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே
சொல்லி வைத்திருக்கிறேன்...
நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன...
தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்...
உன் வெட்கம் ரசிக்க...

உன் கைக் கோர்த்தபடி...
மழையில் நனைய வேண்டும்...
உன் விரல் பிடித்தபடி...
வாழ்வின் எல்லை வரை
நடக்க வேண்டும்...

உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...
உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்...

அதிகம் காத்திருக்க வைக்காதே....
வீணாவது உனக்கான காதல்தான்...
பின் வந்து என்னை குற்றம் சொல்லாதே...
தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள்...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்...
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்...
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்...

Monday, March 16, 2009

ஒரே ஒரு முறை மட்டும்
உன் கண்களை பார்த்து கொள்கிறேன்....
எனக்கு தெரிந்தாக வேண்டும்...
நீ இமைக்கும் போது வருவதுதான் இரவா?
பகலின் சூரியனை விட..
இரவின் மின்மினிகள் எப்படி அழகோ...
அது போலதான்
உன் கொஞ்ச நேர கோபங்களும்..
மற்ற விஷயங்கள் எனும்போது...
நான் கவிதை எழுதுகிறேன்.
உன்னை பற்றி எனும்போது...
நான் எழுதுகிறேன்..
அது கவிதையாகி விடுகிறது.
உன்னை பார்க்கும் கனவுகள்
எப்படி முடிவதே இல்லையோ
அது போலதான்
உன்னை பார்க்காத நாட்கள்
எனக்கு விடிவதே இல்லை.
விளையாடும் பொம்மையென
கையாள்கிறாய் மனதை....
என் இதயத்தை களமென கொண்டு
நீ நடத்தும் காதல் போரில்...
கண்களை ஆயுதமாகவும்..
மௌனத்தை கேடயமாகவும் பயன்படுத்துகிறாய்...
எதிராளி நீ.... ஆயுதம் உன் கண்கள்...
எனும்போது...
விரும்பி ஏற்கிறேன் என் தோல்வியை...
பிடிக்கிறது என்று ஒற்றை வார்த்தையில்...
சொல்ல முடியவில்லை என் காதலை.
ஏன்...
கோடி வார்த்தைகள் கொண்டும்
சொல்வது கடினம்...
வார்த்தைகள் அவசியப்படாத
ஓர் மாலைப்பொழுதில்...
மழையின் ஒவ்வொரு துளியையும்
நமக்குள் வாங்கி
ஒன்றாய் நடக்கையில்...
கோர்த்திருக்கும் நம் கைகளின்
இடையேயான வெப்பத்தில்...
உணர்ந்து கொள்வாய்
உனக்கான என் காதலை...
என் நினைவு ஓர் வற்றாத நதியென...
கால் நனைத்த நீ...
கரையேறி சென்ற பின்னும்...
உன் கொலுசின் ஓசையை
தன்னுள் புதைத்து...
சலசலத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது நதி.
நீ நீர் இறைத்து சென்று விட்டாய்...
மூச்சிரைக்கிறது கிணறு.

என்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததே
உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததும்தான்.

என்ன பிடிக்கும் என்று கேட்ட தோழியிடம்
சொல்லி கொண்டிருந்தாய்.
முழு நிலவு...
மலர்ந்த பூக்கள்...
அழகு வானவில்...
நனைக்கும் மழை...
உலகை அழகாக்கும்
அத்தனையும் பிடிக்குமென்றாய்..
சுருக்கமாக சொல்லியிருக்க வேண்டியதுதானே..
உன்னையே உனக்கு பிடிக்குமென்று.

Sunday, March 15, 2009

சொல்லி விட போகிறேன்...
ஓராயிரம் அர்த்தங்கள் சொல்லும் உன் ஓரப் பார்வையும்..
கண்கள் கொண்டு நீ புரியும் காதல் போரும்...
காயம்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.
மரணம் கூட பழகலாம் போல...
மன'ரணம்'..... கடினமாயிருக்கிறது.
மௌனம் உணர மறுக்கும் உனக்கு...
வார்த்தைகள் கொண்டே சொல்லி விட போகிறேன்...
உனக்கான என் காதலை...