Wednesday, June 17, 2009

பொய் சொல்லப் போறேன்...


உள்ளங்கை காயத்தோடுதான்
வீடு நுழைந்தேன்...
பார்த்ததும் பதறிப் போனாய்...
வேக வேகமாய் திட்டி தீர்த்தாய்...
அதனினும் வேகமாய்
காயத்திற்கு மருந்திட்டாய்.
"ரொம்ப வலிக்குதா.."
என்று மட்டும்
பலநூறு தடவை கேட்டிருப்பாய்...

வலிப்பதாய் ஒருமுறை சொன்னாலும்
நீ எத்தனை துடித்து போவாயென
எனக்கு தெரியுமென்பதால்
வலியில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

என் காயம் எனக்கு வலித்ததை விட...
உன் கண்களில் அதிக வலி இருந்தது.
அழுதுவிடுவது போலிருந்த உன் முகத்தில்...
அத்தனை காதல் இருந்தது.

என் தலை கோதியபடியே...
என்னை உறங்க வைத்தாய்.

உறங்கும் என் விழியின் அசைவில்...
துளி வலி தெரிந்தாலும்
பதறி துடித்தாய்.

காயம்பட்ட உள்ளங்கையில் மிக இதமாய்...
என் உறக்கம் கலைக்காமல் முத்தமிட்டாய்.
இப்பொழுது...
என் காயம்பட்ட கையில்...
உன் கன்னம் பதித்தபடியே...
மிக அழகாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.
காதல் இவ்வளவு அழகா என்று....
உறங்கும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
காலை கண்விழித்ததும் முதலாய் கேட்பாய்..
காயத்தின் வலி பற்றி...

உன் அத்தனை காதல் முன்...
கொஞ்சமும் வலியிருக்காது என்றாலும்...
உன் காதல் வேண்டியே...
பொய் சொல்ல போகிறேன்...
"ரொம்ப வலிக்குதுடி..."

உன்னிடம் பிடிக்காதது...


உன்னிடம் எது பிடிக்காதென்று
கேட்டுக் கொண்டேயிருக்கிறாய்.
உன் தொல்லை தாங்காமல்தான்
இதனை எழுதுகிறேன்....

ஆவலாய் வரும் மழைக்கு
முகம் காட்டாமல்
குடை கொண்டு முகம் மறைப்பாயே..
அது பிடிக்காது.

கூந்தல் கலைக்கும் தென்றலை
நீ செல்லமாய் திட்ட..
அது உலகில் எங்கோ புயலாய் வீசும்..
அது பிடிக்காது.

தோட்டம் முழுக்க பூக்கள் இருந்தும்...
ஒற்றை ரோஜா மட்டுமே சூடிக் கொள்வாய்.
பூந்தோட்டமே மறுத்துவிட்டதால்...
மற்ற பூக்கள் மனம் கலங்குமே...
அது பிடிக்காது.

என் உறக்கம் ரசிப்பதற்க்காய்..
உன் உறக்கம் தொலைத்து..
விழித்திருப்பாயே...
அது பிடிக்காது.

நான் வாய் திறந்து கேட்கும் முன்பே
அத்தனையும் அள்ளி தந்து..
அடுத்து என்ன...
என்பது போல் பார்ப்பாயே...
அது பிடிக்காது.

சின்ன சின்னதாய் வம்பிழுத்து...
பொய்யாய் நான் கோபம் கொண்டாலும்...
பட்டென்று முகம் வாடி...
என் கோபம் கொன்று விடுவாயே...
அது பிடிக்காது.

இப்போதும் கூட இதை படித்ததும்...
"சீய்.. போடா" வை எனக்கு தந்துவிட்டு..
முத்தத்தை காகிதத்திற்கு கொடுப்பாயே...
அது சுத்தமாய் பிடிக்காது.

Sunday, June 14, 2009

வரப் போகும் தேவதைக்கு....

இன்னும் எத்தனை நாட்கள்தான் தவிக்க விடுவாய்...
ஒவ்வொரு நாளும் எத்தனை காதலை....
நீ இழக்கிறாய் தெரியுமா...
என்னை சந்திக்கும் நாளில்...
நிச்சயம் வருந்த போகிறாய்...

உன்னை எப்பொழுது
பார்ப்பேனோ தெரியாது...
ஆனால் பார்த்தபின்...
அந்த நொடியிலேயே...துவங்கிவிடும்
உன்னுடன் என் வாழ்வு...
இத்தனை காதலை நீ
நிச்சயம் மறுக்க மாட்டாய்...
சந்திக்கும் நொடிக்காய் காத்திருக்கிறேன்...
என் தோட்டம் முழுக்க
ரோஜா செடிகள்தான்...
முதல் முதலாய்
பூத்த பூக்களிடம் சொன்னேன்...
உங்களை தொட்டுப் பறிக்க...
தேவதை ஒருத்தி
விரைவில் வருவாள் என...
அத்தனை பூக்களும்
வாடாமல் காத்திருக்கிறது...
உன் பெயர் என்னவென்று தெரியாது.
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே
சொல்லி வைத்திருக்கிறேன்...
நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன...
தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்...
உன் வெட்கம் ரசிக்க...

உன் கைக் கோர்த்தபடி...
மழையில் நனைய வேண்டும்...
உன் விரல் பிடித்தபடி...
வாழ்வின் எல்லை வரை
நடக்க வேண்டும்...

உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...
உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்...

அதிகம் காத்திருக்க வைக்காதே....
வீணாவது உனக்கான காதல்தான்...
பின் வந்து என்னை குற்றம் சொல்லாதே...
தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள்...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்...
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்...
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்...