Monday, December 14, 2009

தொலைந்த வனம்...


அந்த கனவு
எப்பொழுதும் வரும்.
உறக்கம் கலைந்தும்..
நினைவில் நிற்கும்.

அடர்ந்த வனத்தின்
ஒற்றை மனிதனாய்
நீண்ட நேரம்
அலைந்திருப்பேன்..

பசி தொலைத்து..
நினைவு தொலைத்து..
உலகத்தையே தொலைத்து..
தனியே நான் மட்டும்.

வனம் அதிர..
பெருங்குரலெடுத்து
எவனோ பாடும் பாடல்...
உயிரின் நரம்புகளை
மீட்டி செல்லும்.

அவன் பாடலில்..
செழித்து வளரும்
வனம் மெல்ல..
என் மீது படர துவங்கும்.

அடர்ந்த வனத்தின்..
இருள் கிழித்தபடி பாயும்..
ஒளியை சுவாசிக்கும் முன்னே..
உறக்கம் தொலைத்திருப்பேன்.

பின் வந்த நாட்களில்
மெல்ல மெல்ல
பாடல் தொலைய தொடங்கியது.

பாடலை தொலைத்த வனம்
கருக தொடங்கியது...
பின்னொரு நாளில்
வனமும் மொத்தமாய் தொலைந்தது.

இப்பொழுதெல்லாம்
கனவுகள் வருவதில்லை.
கனவுகளில் தொலைத்தவன்...
கனவையே தொலைத்து விட்டேன்.

(இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)