Saturday, July 24, 2010

எனையொத்த சாயலில் கடவுள்...





கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோவிலின்
உள்ளே செல்வதற்கான பாதையெங்கும்
முட்புதர்களால் சூழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் யாரும் வந்துபோனதற்குத்
தடமேதும் இருக்கவில்லை.

நிறைவேற்ற ஏதும் பிரார்த்தனைகளின்றி
வெறித்தபடி இருக்கிறார் கடவுள்.
சுவரெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
முன்னொரு காலத்தின் பிரார்த்தனைகள்..

புறக்கணிக்கப்பட்ட கோவிலினுள்
பசியோடிருக்கும் கடவுளை நோக்கி..
உதட்டில் புன்னகையோடும்
கையில் ஆப்பிளோடும்
நடக்கத் தொடங்குகிறது சாத்தான்.

மரணம் நிகழ்ந்த வீடு...

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அதனதன் இயல்பு மாறியிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
வந்து போகும் அத்தனை முகங்களிலும்
ஒரு இறுக்கம் திணிக்கப்படுகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
அழும் உறவுகளைத் தேற்றுவதெப்படியென
யாருக்கும் புரிவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
யாருக்கும் பசிப்பதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு
சந்திக்கும் உறவுகளும்
புன்னகை பரிமாறுவதில்லை.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
இறந்தவரின் மகனோ மகளோ
அனைவராலும்
கூர்ந்து கவனிக்கப்படுகிறார்கள்.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
மரணம் நிகழ்ந்த விதம்
விவரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டில்
தொடர்ந்த சில நாட்களுக்கு
மரணம்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

யாசித்து பெறாத நாணயம்...





பச்சை விளக்கெரிய
பதினைந்து நொடிகளிருக்கும்போது
இடுப்பிலிருக்கும் குழந்தையின்
கைகளை கொண்டு யாசகம் கேட்டிருந்தவள்
எனை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள்.

அவசரத்தில் ஒரு நாணயம்
கைவிட்டு உருண்டோடி
மறைந்து போக..

கையிலிருந்த நாணயத்தை
தயக்கமாய் தந்து நகர்ந்தேன்.

வீடு வந்து சேரும்வரை
நினைவை விட்டு அகலவேயில்லை
உருண்டோடிய நாணயம்.