Thursday, April 30, 2015

நீ...

சூரியன் போனதும் ஒளிரும் நட்சத்திரம் போல்
உன்னிடம் பெற்ற புன்னகையை
நீ இல்லாத தருணங்களில்

விடியலில் வாசல்முன் கோலமிடுகிறாய்
ஈரம் காயாத உன் கூந்தல்
கூடுதலாய் ஒரு புள்ளியிடுகிறது
அதனை சுற்றி கோலமிடுகிறது காதல்.

கண்கட்டு வித்தைகளை
மிக எளிதாய் தோற்கடித்து விடுகிறது
உன் கண் காட்டும் வித்தைகள்.

உன்னிடம் கேட்டு வாங்கி
சேகரித்து வைத்திருக்கிறேன்
நிறைய வெட்கங்களை.

நீ கேட்டு வாங்கவும்
சேகரித்து வைத்திருக்கிறேன்
நிறைய முத்தங்களை. 

உன்னை தீண்டி செல்லும் தென்றலை
செல்லமாய் முறைக்கிறாய்.
ஈரப்பதம் கூடிப்போய்
என்மேல் வீசுகிறது குளிர்காற்றாய்.

ரகசியங்களின் ஒற்றைச்சாவி

நிழல்களற்ற ஓர் இரவில் நடக்கும் உங்கள்
பின்கழுத்தில் படரும்
மிக மெல்லிய மூச்சுக்காற்று
என்னுடையதாகவும் இருக்ககூடும்.

 பிரதிபலிக்க பிம்பங்களின்றி
 தன் பாதரசம் தின்று செரிக்கும்
பழைய கண்ணாடி ஒன்று
உங்கள் பரணில் இருக்ககூடும்

எழுத தொடங்கி முடியா கடிதமொன்று
தூசு படிந்த புத்தகத்தின்
96-ம் பக்கத்தில் இருக்ககூடும்

 முன்னொரு மழைநாளில்
தேநீர் கோப்பைகளுக்குள்
விழுந்த வார்த்தைகள் யாருமறியாமல்
மௌனம் போர்த்தி ஒளிந்திருக்ககூடும்

 நம்பிக்கையின் குருதி தோய்ந்த
ஓர் துரோகத்தின் கூர்வாள்
இன்னும் உயிர்ப்போடு பதுங்கியிருக்ககூடும்

 இவையனைத்தும் காக்கும் பொருட்டு
ரகசியங்களின் ஒற்றை சாவியை
இறுக பற்றியபடி

நிழல்களற்ற ஓர் இரவில் நடக்கும் உங்கள்
பின்கழுத்தில் படரும்
மிக மெல்லிய மூச்சுக்காற்று
என்னுடையதாகவும் இருக்ககூடும்.