Wednesday, June 17, 2009

உன்னிடம் பிடிக்காதது...


உன்னிடம் எது பிடிக்காதென்று
கேட்டுக் கொண்டேயிருக்கிறாய்.
உன் தொல்லை தாங்காமல்தான்
இதனை எழுதுகிறேன்....

ஆவலாய் வரும் மழைக்கு
முகம் காட்டாமல்
குடை கொண்டு முகம் மறைப்பாயே..
அது பிடிக்காது.

கூந்தல் கலைக்கும் தென்றலை
நீ செல்லமாய் திட்ட..
அது உலகில் எங்கோ புயலாய் வீசும்..
அது பிடிக்காது.

தோட்டம் முழுக்க பூக்கள் இருந்தும்...
ஒற்றை ரோஜா மட்டுமே சூடிக் கொள்வாய்.
பூந்தோட்டமே மறுத்துவிட்டதால்...
மற்ற பூக்கள் மனம் கலங்குமே...
அது பிடிக்காது.

என் உறக்கம் ரசிப்பதற்க்காய்..
உன் உறக்கம் தொலைத்து..
விழித்திருப்பாயே...
அது பிடிக்காது.

நான் வாய் திறந்து கேட்கும் முன்பே
அத்தனையும் அள்ளி தந்து..
அடுத்து என்ன...
என்பது போல் பார்ப்பாயே...
அது பிடிக்காது.

சின்ன சின்னதாய் வம்பிழுத்து...
பொய்யாய் நான் கோபம் கொண்டாலும்...
பட்டென்று முகம் வாடி...
என் கோபம் கொன்று விடுவாயே...
அது பிடிக்காது.

இப்போதும் கூட இதை படித்ததும்...
"சீய்.. போடா" வை எனக்கு தந்துவிட்டு..
முத்தத்தை காகிதத்திற்கு கொடுப்பாயே...
அது சுத்தமாய் பிடிக்காது.

4 comments:

ரிஷபன் said...

பிடிக்காது.. பிடிக்காதுன்னு சொல்லியே கவிதையைப் பிடிக்க வச்சிட்டிங்க..

கமலேஷ் said...

மிக எளிமையான அழகான கவிதை...
வாழ்த்துக்கள்..

கமலேஷ் said...

மிக எளிமையான அழகான கவிதை...
வாழ்த்துக்கள்..

கௌதமன் said...

அழகான கவிதை.....உன்னிடம் பிடிக்காதது எனக்கு பிடித்திருக்கிறது ...:)