Saturday, October 17, 2009

சந்திப்போம்... பிரிவோம்...


நீண்ட நாட்களுக்கு பின் வந்தாய்...
அறிவிப்பில்லாத மழையை போல சிலசமயம்..
நிகழ்ந்து விடுகிறது இது போன்ற சந்திப்புகள்..
உன் கண்களின் பரிச்சயம்..
ஏனோ அந்நியமாய் தோன்ற...
என் நலம் வினவினாய்....

எதனை சொல்ல...
வாழ்க்கையென நினைத்த காதல்
வெறும் வார்த்தையென ஆன பின்னும்...
தொடர்ந்து செல்லும் வாழ்க்கை...

எதிர்ப்புகளை சமாளிக்கும் காதல் கூட...
எதிர்பார்ப்புகளின் முன் தோற்கும் என்பதற்கு..
நாமே சாட்சிகளாகி போனோம்...

கனவுகளுக்காய் உறங்கிய நாட்கள் தொலைத்து...
உன் நினைவுகளால் விழித்திருந்த இரவுகள்...
சுவாசப்பை முழுதும் நினைவுகள் நிரப்பி...
மூச்சு திணறிய ராத்திரி தருணங்கள்...

தினம் கண்கள் விழித்ததும் அவசரமாய்...
உன் குறுஞ்செய்தி எதிர்பார்த்து ஏமாறுவதும்...
அடுத்தவருக்கான அழைப்புகளுக்கும்...
என் அலைப்பேசி தொட்டு பின் சுதாரிப்பதும்...

இத்தனை இருந்தும்...
சொல்வதில் அர்த்தமில்லை...
வரவழைத்த புன்னகையுடன்...
நலமென பொய்யுரைத்து...
உன் நலம் வினவினேன்.
சிறிது மௌனத்திற்கு பின்
புன்னகைத்து நலமென்றாய்.

ஒன்றாய் தேநீர்...
கட்டாய புன்னகைகள்...
கொஞ்சம் வார்த்தைகள்...
நிறைய மௌனம்...

பின் ஒரு புன்னகையில்
விடைப்பெற்றாய்...
ஏனோ இம்முறையும்...
காரணம் கேட்க தோன்றவில்லை.

நீ... சில குறிப்புகள்...


இது...
உன்னை பற்றிய சில குறிப்புகள்...
உன்னால் எனக்குள் பற்றிய சில குறிப்புகள்...

இரு துளை மட்டுமே கொண்ட
மிக அழகிய புல்லாங்குழல்...
உன் நாசி...

எல்லோரையும் போல...
வெறும் காற்றை தான் உள்ளிழுக்கிறாய்.
ஆனால் நீ வெளிவிடும் காற்று மட்டும்..
எனக்கான ராகமாகிறது.

சூரியனை சுற்றி வரும் பூமி தெரியும்.
கண்களில் சூரியனை வைத்துக் கொண்டு...
பூமிக்குள் சுற்றி வருபவள் நீ.

எல்லோரையும் போல்தான்...
இமை மூடி திறக்கிறாய்.
எனக்குதான் ஒவ்வொரு முறையும்...
உலகம் இருண்டு போகிறது.

இத்தனை அழகாக உறங்க...
எங்கேதான் கற்றுக் கொண்டாயோ...

நீ உறங்கும் அழகை ரசிப்பதற்க்காய்...
தாமதமாய் வர சொல்லி...
சூரியனிடம் கெஞ்சுகிறது நிலவு.

எல்லோரையும் போல்தான்...
மழையில் நனைகிறாய்.
எவருக்கும் தெரியாமல்
உன்னில் நனைகிறது மழை.

மழையில் நனைந்தபடி...
குழந்தைகளோடு ஆடுகிறாய்.
தானும் குழந்தையாகி...
ஆட துவங்குகிறது மழை.

எதை பற்றியும் கவலை கொள்ளாத
ஒரு குழந்தையை போலதான்
நீ வாழ்கிறாய் ...

அதன் ஒவ்வொரு அசைவையும்
உற்று கவனிக்கும் ஒரு தாயை போலதான்
நான் வாழ்கிறேன்...

உன்னை பற்றி...
உனக்கு தெரியுமென்றாலும்...
எனக்கு தெரிந்த நீ...
ரகசியமானவள்... மழை போலவே...

உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை...

நம் அறிமுக நாட்களில்....
மௌனங்களை பரிமாறிக் கொண்டோம்...
பின் கொஞ்சமாய் பார்வைகளும் புன்னகைகளும்...
பேச தொடங்கி... பின் நிறையப் பேசினோம்...
இதயம் வரை நீண்டது பரிமாற்றம்.

இந்நாட்களில் மீண்டும் துவங்கியிருக்கிறது...
மௌனங்களின் பரிமாற்றம்....
இம்முறை ஒவ்வொரு மௌனத்திற்கும்...
அர்த்தங்கள் கற்பிக்கிறது மனது...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வைகள் தவிர்க்கப்படுகிறது...
பார்க்கும் பார்வைகளிலும் விடை தெரியா கேள்விகள்...
எந்த நிமிடமும் உதிர்ந்து விடும்...
ஒற்றை ரோஜாவின் கடைசி இதழாக...
நம்மிடையே மீதமிருக்கிறோம் நாம்...

நம்மை இணைத்திருந்த சிறகுகள்...
கனமாகிப் போனதாய் ஓர் எண்ணம்.
நேற்று வரை சுமந்த சிறகுகள்....
இன்று ஏனோ பூட்டப்பட்ட சங்கிலியாய்.

நம் சுயங்களின் சுமை தாங்காமல்...
நழுவி செல்கிறது முகமூடிகள்..
நம் உண்மை முகங்கள் பார்க்க பிடிக்காமல்..
பிரிவொன்றை எதிர்பார்த்து நாட்கள் கடத்துகிறோம்...

உனக்கும் இருக்ககூடும்...
சில காரணங்கள்..
உன்னிடமும் இருக்ககூடும்....
வலிகளை பட்டியலிடும் ஒரு கவிதை...
எனினும் அறிய விருப்பமின்றி விலகுகிறேன்...

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உண்டு...
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.