Wednesday, June 17, 2009

பொய் சொல்லப் போறேன்...


உள்ளங்கை காயத்தோடுதான்
வீடு நுழைந்தேன்...
பார்த்ததும் பதறிப் போனாய்...
வேக வேகமாய் திட்டி தீர்த்தாய்...
அதனினும் வேகமாய்
காயத்திற்கு மருந்திட்டாய்.
"ரொம்ப வலிக்குதா.."
என்று மட்டும்
பலநூறு தடவை கேட்டிருப்பாய்...

வலிப்பதாய் ஒருமுறை சொன்னாலும்
நீ எத்தனை துடித்து போவாயென
எனக்கு தெரியுமென்பதால்
வலியில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

என் காயம் எனக்கு வலித்ததை விட...
உன் கண்களில் அதிக வலி இருந்தது.
அழுதுவிடுவது போலிருந்த உன் முகத்தில்...
அத்தனை காதல் இருந்தது.

என் தலை கோதியபடியே...
என்னை உறங்க வைத்தாய்.

உறங்கும் என் விழியின் அசைவில்...
துளி வலி தெரிந்தாலும்
பதறி துடித்தாய்.

காயம்பட்ட உள்ளங்கையில் மிக இதமாய்...
என் உறக்கம் கலைக்காமல் முத்தமிட்டாய்.
இப்பொழுது...
என் காயம்பட்ட கையில்...
உன் கன்னம் பதித்தபடியே...
மிக அழகாய் உறங்கிக் கொண்டிருக்கிறாய்.
காதல் இவ்வளவு அழகா என்று....
உறங்கும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
காலை கண்விழித்ததும் முதலாய் கேட்பாய்..
காயத்தின் வலி பற்றி...

உன் அத்தனை காதல் முன்...
கொஞ்சமும் வலியிருக்காது என்றாலும்...
உன் காதல் வேண்டியே...
பொய் சொல்ல போகிறேன்...
"ரொம்ப வலிக்குதுடி..."

4 comments:

சிவாஜி சங்கர் said...

//"ரொம்ப வலிக்குதுடி..." //

அழகான பொய்..! நல்ல ரசனை தொடர்க,..

VimalKumar said...

superr...

Unknown said...

காதல் சுகமானது

சுஜா செல்லப்பன் said...

அழகான பொய்..காதல் படுத்தும் பாடு..நல்ல கவிதை பாராட்டுக்கள் !!